கவிதா சேது சொக்கலிங்கம் பதிப்புத் தடங்கள்


செட்டிநாட்டுத் தலைநகரான தேவகோட்டையில் சேதுராமன் அலமேலு தம்பதிக்குத் தலைமகனாய்ப் பிறந்த (27-6-1949) சேது சொக்கலிங்கம் பள்ளியிறுதிப் படிப்பை தேவகோட்டை தே பிரித்தோ பள்ளியில் நிறைவு செய்தார். இவர் சென்னைக்கு வந்து நாற்பத்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. சென்னையில் வசித்தாலும் பிறந்த மண் மீது பிடிமானம் கொண்டவர். அங்கு இன்றும் இலக்கியப் பணி செய்து வருகிறார்.

மொழி, இலக்கிய நாட்டம் கொண்ட இவரை சென்னையில் அச்சுத் துறை அழைத்தது. அப்போது பிரபலமாக இருந்த ‘வணங்காமுடி’ சொக்கலிங்கம் அவர்களின் பாரதம் அச்சகத்தில் முதலில் அலுவலகப் பொறுப்பாளர் (1967-1970) பணி கிடைத்தது. அது மிகச் சரியான தொடக்கமாக அமைந்தது. பின் 1971-73இல் திரு. செந்தில் நாதன் செட்டியார் அவர்களின் ராதா பதிப்பக மேலாளர் பொறுப்பில் பதிப்புப் பணி தேடி வந்தது. நண்பர் சாமிநாதன் அவர்களுடன் சேர்ந்து தமிழ்த்தாய்ப் பதிப்பகத்தை 1974இல் தொடங்கி நல்ல நூல்கள் வெளியிட்டார்.


திருமணம் சொந்தத் தொழிலுக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தேவகோட்டை தியாகி திரு. கே.எம்.எஸ். மற்றும் பாரதி அன்பர் பூவநாதன் தலைமையில் ஜானகியை 1975இல் மணந்து கொண்டார். மறு வருடம் சொந்தப் பதிப்பாக மகள் கவிதா பிறக்க, அதே வருடத்தில் பதிப்பு வாழ்க்கையில் கவிதா பெயரில் சொந்தப் பதிப்பகம் மலர்ந்தது.

‘படிக்க, பரிசளிக்க, பயன்பெற’ என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 40 ஆண்டுகளாக மேலான பதிப்புப் பணியில் நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் பாலமாக அமைந்துள்ளது கவிதா. இதுவரை வெவ்வேறு துறைகளில் 2500க்கும் மேற்பட்ட நூல்களை கவிதா வெளியிட்டுள்ளது. நவீன இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வு, மொழிபெயர்ப்பு, பாரதி, பாரதிதாசன் படைப்புகள், திருக்குறள், சிறுவர் இலக்கியம், அறிவியல், நகைச்சுவை, தன்னம்பிக்கை, மனவளம், தத்துவம், சமையற்கலை என்று பல துறைகளில் சாரம் மிக்க நூல்களைத் தனி முத்திரையுடன் வெளியிட்டு வருகிறது. புனேயில் உள்ள ஓஷோ ஃபவுண்டேஷனுடன் இணைந்து தத்துவஞானி ஓஷோவின் அரிய படைப்புகளில் இதுவரை 71 நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அவை விற்பனையில் சாதனை படைத்துள்ளன. சேது அலமி பிரசுரம், தனலெட்சுமி பதிப்பகம் என்ற கவிதாவின் சகோதர நிறுவனங்கள் இதுவரை சுமார் 500 நூல்களை வெளியிட்டுள்ளன. மிகச் சிறிய தொகையில் அரிய புத்தகங்களை வழங்கும் சிறு நூல் திட்டத்தில் துணை நிறுவனமாகிய சபரீஷ் பாரதி பத்து ரூபாய் விலையில் 245 நூல்களை வெளியிட்டுள்ளது.

கவிதாவின் படைப்பாளர்கள் பட்டியல் பிரபலங்களின் அணிவகுப்பு. உதாரணத்திற்கு: தவத்திரு குன்றக்குடி அடிகளார், பத்மபூஷண் ஜெயகாந்தன், கவியோகி சுத்தானந்த பாரதியார், தீபம் நா. பார்த்தசாரதி, வாண்டு மாமா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், பிரபஞ்சன், சா. கந்தசாமி, சிற்பி பாலசுப்பிரமணியம், கவிஞர் மு. மேத்தா, கவிஞர் பாலா, பேராசிரியர் சாலமன் பாப்பையா, சொல்வேந்தர் சு.கி.சிவம், இசைஞானி இளையராஜா, மனநல மருத்துவர் ருத்ரன், விக்கிரமன், வாசவன், பூவை அமுதன், ஜெயமோகன், வாஸந்தி, ஜோதிர்லதா கிரிஜா, அன்புக்கொடி நல்லதம்பி, காஞ்சனா தாமோதரன், கிரண் பேடி, நவின் சாவ்லா, முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன், டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன், டாக்டர் ஜி. ராமநாதன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர் டாக்டர் ஆர்.நடராஜன், வரலொட்டி ரெங்கசாமி, சி.ஆர். ரவீந்திரன், கவிஞர் சுப்பு ஆறுமுகம், அறந்தை நாராயணன், வெ. இன்சுவை, சி.எஸ். தேவநாதன், செங்கை ஆழியான், ப. முருகேசன், பட்டிமன்றம் ராஜா, கௌதம நீலாம்பரன், சூர்யகாந்தன், மதுரா, ஜெகாதா, பழனி இராகுலதாசன், ராசு மகன், புலவர் ம. அருள்சாமி, விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்........ பட்டியல் நீள்கிறது.

கவிதா வெளியீடுகள் ஞானபீடப் பரிசு, சாகித்ய அகாடமி பரிசு, புதுச்சேரி அரசு விருது, பாரதிய பாஷா விருது, ராஜராஜன் விருது, எம்.ஏ.எம். அறக்கட்டளை விருது, சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது, தமிழ் வளர்ச்சித் துறை விருது, இலக்கியச் சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளன. இவை அனைத்துமே சேது. சொக்கலிங்கம் என்ற பண்பாளரின் முனைவுகளினால் தான் என்கிறார்கள் நண்பர்கள். தனித்த பெருமை இருந்தாலும் இவர் சக பதிப்பாளர்களைப் போற்றும் பண்பாளர். மூத்த பதிப்பாளர்களின் சீடர், சம வயதுப் பதி���்பாளர்களுக்குத் தோழர், இளம் பதிப்பாளர்களுக்கு இனிய வழிகாட்டி. வெற்றிக்கு வேறென்ன சான்று வேண்டும்?

கவிதா பப்ளிகேஷன் சென்னையின் இதய வாயிலாகத் திகழும் தியாகராய நகர், பாண்டிபஜாரில் வாசகர்களின் அறிவுத் தேடலுக்கு விடையாக, குளிர்சாதன வசதியுடன் திகழ்கிறது.

பதிப்புச்செம்மல் மெய்யப்பனார் அகமகிழ்ந்து சொன்ன ‘அறிவுச்சுடர் வீசும் ஆலயம்’ என்றபடி பதிப்புப்பணியில் வெள்ளி விழாவைக் கடந்து தன் இனிய பயணத்தைத் தொடர்கிறது.......